Sunday, June 20, 2010

அன்பென்ற நதி மீது படகாகு

அன்பென்ற நதி மீது படகாகு
அறியாத பேரின்ப கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகு
அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்

வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல்
துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு
உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல்
தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் காட்டு
நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல்
பனி வேகந்தனில் இன்னும் பலம் ஊட்டு

அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு
இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு

மலர் வாசம் தரும் பூவில் இழப்பில்லை
மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை
தானே தன் கனி உண்ணும் செடி இல்லை
தனக்கென்றே வாழ்ந்தால் விண் விடிவில்லை
இளகாத மனம் செய்தல் பணி இல்லை
இறங்காத இதயத்தில் இறை இல்லை

தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும்
அன்புள்ளம் இறை தந்த வரமாகும்